சென்னை : புதிய கல்வி கொள்கை குறித்து, ஆய்வு செய்வதற்கு, 13 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள அரசாணை: முதல்வரின் உத்தரவுப்படி, புதிய கல்வி கொள்கை குறித்தும், இரு மொழி கொள்கையை தொடர்வது குறித்தும், அரசுக்கு ஆலோசனை தரும் வகையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து, இக்குழு ஆய்வு செய்யும்.


முதல்வர் அறிவித்துள்ளபடி, தமிழகத்தில், இரு மொழி கொள்கை தொடரும் வகையிலான, மொழி கொள்கை குறித்து, நிபுணர் குழுவினர் உரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வர்.நிபுணர் குழுவினர், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை பெற்று, குழு அமைத்த நாளில் இருந்து, ஓராண்டு காலத்தில், அரசுக்கு அறிக்கை அளிப்பர்.குழுவுக்கான அனைத்து உதவிகளையும், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் ஒருங்கிணைந்து வழங்குவர்.

பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் அளித்துள்ள பரிந்துரைகளின் படி, நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குழுவின் தலைவராக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் செயல்படுவார்.

உறுப்பினர்கள் விபரம்:

* சிஜி தாமஸ் வைத்யன், உறுப்பினர் செயலர்

* பூஜா குல்கர்னி, சிறப்பு செயலர், நிதித் துறை

* லதா, மாநில திட்ட இயக்குனர், அனைவருக்கும் கல்வி திட்டம்

* கவிதா ராமு, இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம், சமூக நலத்துறை

* முனியநாதன், கமிஷனர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

* அகிலா ராதாகிருஷ்ணன், சமூக கல்வி கொள்கை ஆர்வலர், 'யுனிசெப்'

* பஞ்சநாதம், துணைவேந்தர், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை

* ஜோதிமுருகன், முன்னாள் துணை வேந்தர், திருவள்ளுவர் பல்கலை

* பாலசுப்ரமணியன், இணை துணை வேந்தர், எஸ்.ஆர்.எம்., பல்கலை

* மரியஸீனா ஜான்சன், வேந்தர், சத்தியபாமா பல்கலை

* இளங்கோவன், ஓய்வுபெற்ற பள்ளி கல்வி இயக்குனர்

* சுந்தரபரிபூரண பட்சிராஜன், முன்னாள் உறுப்பினர், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்

* ஜெயஸ்ரீ, தமிழ் ஆசிரியர், திருவண்ணாமலை.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.