மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 29, 30-ம் தேதியில் நடக்கிறது. கரோனாவால் தேர்வு வழிமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி (NCERT) இணைந்து, பள்ளி மாணவர்களுக்குத் தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வைக் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

கரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருவதால், இத்தேர்வு தடைபடாமல் இருப்பதற்கு, தேர்வில் சில வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் வரும் செப்டம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வு தேசிய அளவில், நவம்பர், 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வுகளை, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே, ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் மற்றும் கணிணி மூலம் பங்கேற்கலாம். நடப்பாண்டில், தேர்வு 'திறந்த புத்தக முறையாக' மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்துடன் தமிழ் உட்பட அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு 1.30 மணி நேரம் நடக்கிறது. தேசிய அளவில் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, தேசிய அளவில், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவு பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிவியல் ஆய்வில், பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, அறிவியல் அறிஞர்களுடன் அல்லது ஆராய்ச்சியாளருடன் அளவளாவித் தேர்வுக்கு சிறப்பாகத் தயார் செய்வதற்கு வழிகாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.vvm.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பள்ளிகளும் தங்கள் மாணவர்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இந்தத் தேர்வு குறித்து வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில் "பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக நிச்சயம் இருக்கும். இந்தத் தேர்வில் புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடம் உரையாடுவதற்கும் அவர்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற நிலையை இப்போது பிராந்திய மொழிகளில் எழுதும் விதமாக மாற்றியிருக்கிறோம்” என்றார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் ராமலிங்கம் கூறுகையில், "தேர்வுக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி முதல் மாதிரித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு தன்னம்பிக்கையும் தெளிவும் பெறலாம். மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்படும்" என்று கூறினார்.

தேர்வு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் அருண் நாகலிங்கம் ஆகியோரை 9443190423 மற்றும் 9894926925 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.