ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, "ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதைத் தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை" என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. நாள் முழுவதும் மாணவர்களைப் பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக கணினி பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீட்டுப் பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஆக.24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், உலகம் முழுவதுமே ஆன்லைன் மூலம்தான் தற்போது வகுப்புகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலைப் பகுதியில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன? ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போது அவர்களுக்கு எப்படிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன? பதிவு செய்து அனுப்பப்படுகிறதா? ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.

இதுகுறித்து வருகிற 27-ம் தேதி விரிவாகப் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Source : www.hindutamil.in