சென்னை; பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும், கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில், டிப்ளமா படிப்பில் சேருவதற்கான, விண்ணப்பப் பதிவு இன்று துவங்குகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கமாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், டி.எல்.எட்., என்ற, டிப்ளமா கல்வியியல் பயிற்சி படிப்பு நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த படிப்பில் சேரலாம்.இந்த டிப்ளமா முடித்தோர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் பங்கேற்று, தொடக்க கல்வி வகுப்புகளுக்கு ஆசிரியர் பணியில் சேரலாம்; நேரடியாக பட்டப்படிப்பிலும் சேர முடியும்.இந்த ஆண்டில், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், டி.எல்.எட்., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்க உள்ளது.

இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், www.tnscert.org என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்ப விபரங்களை, 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவேற்றலாம்.நிதி உதவி பெறும் நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட, தனியார் நிறுவனங்களில் படிக்க விரும்புவோர், அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் முகவரிகள், www.tnscert.org என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.