புதுடில்லி: மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிடுகையில், 'புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில், ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, அது தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் பரிந்துரைகளை வரவேற்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய பள்ளி கல்வித் துறை செயலர், அனிதா கர்வால் கூறியதாவது: பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு பிரிவிற்கும், தனித்தனியாக, கேள்வி - பதில் முறையில், படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.பயனுள்ள பரிந்துரைகள், நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும். இன்று துவங்கி, வரும் 31 வரை, www.innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதளம் வாயிலாக, ஆசிரியர்கள், தங்கள் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.