சென்னை; கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 27ம் தேதி துவங்குகிறது.

கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், அரசின் ஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு, எந்தவிதமான கல்வி கட்டணமும் செலுத்த வேண்டாம். அந்த தொகையை, அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும்.நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கு, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு: ஒவ்வொரு பள்ளியும், இலவச மாணவர் சேர்க்கைக்கான இடங்களை, இன்றைக்குள் பட்டியலிட வேண்டும். இடங்களின் விபரங்களை, ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையிலும், பள்ளி கல்வித் துறையின் இணையதளத்திலும், வரும், 25க்குள் வெளியிட வேண்டும்.அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு அறிவிப்பை, 26ல் வெளியிட வேண்டும். 27 முதல் செப்., 25 வரை, ஆன்லைனில் பெற்றோரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும்.தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பட்டியல், செப்., 30ல் பள்ளி கல்வி இணையதளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அக்., 1ல் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் இறுதி பட்டியல், அக்டோபர், 3ல் தயாரிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.இறுதி பட்டியலில், குறைந்த பட்சம் ஐந்து இடங்களில், காத்திருப்போர் பட்டியலில், மாணவர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.