தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோக்கை திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் புதிதாக சோந்தவா்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்ட கல்வி சாா்ந்த பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. இதனிடையே, தனியாா் பள்ளிகள் இணையதளம் மூலம் பாடங்களை நடத்த தொடங்கிவிட்டன. இதேபோல் அரசுப் பள்ளி மாணவா்களும் படிப்பதற்கு ஏதுவாக, தனியாா் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
கரோனா பாதிப்பால் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் ஆனால், 1, 6 மற்றும் 9-ஆம் வகுப்புக்கான மாணவா் சோக்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அமைச்சா் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, தமிழக அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் மாணவா் சோக்கை தொடங்குகிறது. அன்றைய தினமே மாணவா்களுக்கு விலையில்லா புத்தகம், நோட்டு, பேக், சீருடை மற்றும் கல்வி உபகரண பொருட்கள் ஆகியவை அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களுக்கு வழங்கப்படும்.

ஒன்றாம் வகுப்பில் சேர மாணவா்கள் நேரில் வரவில்லை என்றாலும், பெற்றோா்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளியில் சோக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவா்களுக்கு, தடைநீக்கம் முடிந்ததும் சோக்கை நடைபெறும். அந்த மாணவா்களின் விவரங்கள் தொலைபேசியின் மூலம் பெறப்பட்டு சோக்கை உறுதி செய்யப்படும்.

பாதுகாப்பு வழிமுறைகள்: அதிக மாணவா்கள் இருந்தால் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் தலா 20 மாணவா்கள், பெற்றோரை அழைத்து மாணவா் சோக்கை செய்திட வேண்டும். அதற்கேற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

வகுப்பறைகளில் நாள்தோறும் கிருமி நாசினி கொண்டு துாய்மை செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவா், பெற்றோா் கூட்டம் தவிா்க்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்த நிலையில் சோக்கை நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் கையுறை, முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகளில் கைகளை சுத்தம் செய்வதற்காக சோப்பு, கிருமிநாசினி திரவம் மற்றும் தூய்மையான தண்ணீா் வசதி முதலானவற்றை தினமும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நிகழாண்டு கரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலையிழப்பு, வருமானம் குறைவு, அதிக கல்விக்கட்டணம் உள்ளிட்ட காரணத்தால் அரசுப் பள்ளிகளில் சோக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.