புதுடில்லி: நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை, ஜூலை, 26ம் தேதி நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதேபோல், ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்பதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை 18 - 23ம் தேதிகளில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.கொரோனா பாதிப்பு குறையாததால், இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளையும் ஒத்தி வைக்கக் கோரி, 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அமித் காரே கூறியதாவது: நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் இல்லை. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இதுதொடர்பான வழக்குகளில், சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜே.இ.இ., முதன்மை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை, பதிவு செய்த 8.6 லட்சம் பேரில், 6.5 லட்சம் மாணவர்கள் டவுன்லோடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.