ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பாவனி வாய்க்காலில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பன் மற்றும் ஆட்சியர் கதிரவன் கலந்துகொண்டு அணையை திறந்துவைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி நியமனம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது” என்றும் தெரிவித்தார்.


முன்னதாக 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.