சென்னை; தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, இன்று கடைசி நாள்.

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, உயர்கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கான ஆன்லைன் பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிந்தது.கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் பிரதிகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, ஆக., 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பல்வேறு பாட திட்டங்களில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவும், சில பாட திட்டங்களில் சான்றிதழ்களும் வரவேண்டியிருந்தது.

இதன் காரணமாக, சான்றிதழ் பதிவேற்றத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது.'கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்' என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது