அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் வரை நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்க ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த கூறுவது குறித்து வரும் தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது.

சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியின் பெற்றோர் புகார் அளித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுவதாலும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். 1ம் வகுப்பில் இதுவரை ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால், செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் தனியார் பள்ளியில் இருந்தும் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.