'பள்ளி குழந்தைகள் பசியை தினமும் ஆற்றுகிறேன்!'
தான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி:

சிவகாசியில் இருந்து, 8 கி.மீ.,யில் உள்ளது, க.மடத்துப்பட்டி கிராமம். அங்கு, 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 1,000 பேர் கொண்ட அந்த கிராமத்தில், அனைவரும், அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள்; மிகவும் ஏழை.நான் வசிப்பது, க.மடத்துப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில். எங்கள் பள்ளியில், இரண்டாம் வகுப்புக்கு நான் ஆசிரியை. என்னிடம், 30 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி திறந்திருந்த நேரத்தில், மதிய உணவு அவர்களுக்கு கிடைத்து வந்தது.கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டதால், அந்த மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஏழைகளான அவர்களின் பெற்றோருக்கு, இந்த கொரோனா நேரத்தில் வேலையும் இல்லாததால், வருமானம் அறவே இல்லை.இதனால் குழந்தைகள் பசியால் வாடின. கொரோனா ஊரடங்கு துவக்கத்திலேயே அதை அறிந்த நான், தினமும், மதிய உணவு வழங்க முடிவு செய்தேன்.

அந்த பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுப்பதால், எனக்கு சம்பளம் கிடைக்கிறது. பள்ளி திறக்கப்படாமலேயே எனக்கு சம்பளம் வருகிறது; ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.இதனால், அந்த குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு அளிக்க முடிவு செய்து, வீட்டில் சமைத்து எடுத்துச் சென்று, என் வகுப்பில் படிக்கும், 30 குழந்தைகளுக்கும் முதலில் வழங்கினேன். பிற குழந்தைகளும் உணவுக்கு ஏங்குவரே என அறிந்து, பிறர் உதவியுடன் கிடைத்த நிதியால், உணவு சமைத்து, அனைத்து குழந்தைகளுக்கும் வழங்குகிறோம்.

இதற்காக என் பேஸ்புக் பக்கம், bharathisanthiyaohmf அறிவிப்பு வெளியிட்டேன். அதைப் பார்த்த நல்ல உள்ளங்கள் உதவி செய்கின்றனர். அந்த பணத்தில், எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குகிறேன்.பள்ளி ஆசிரியையாக பணியில் சேர்ந்த, 2004 முதல், இதுபோல ஏதாவது சேவைகளை செய்து வருகிறேன். இதனால், இந்த கிராமமும், பள்ளிக் குழந்தைகளும் என்னுடன் இரண்டற கலந்து விட்டனர். பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் போன்றவற்றில் நான் பங்கேற்கும் போது கிடைக்கும் பணத்தை தனியாக சேர்த்து வைத்து, அந்த கிராம மக்கள் நலனுக்காக பயன்படுத்துகிறேன்.

குறிப்பாக, ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, பள்ளிக்கு தேவையான நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்குவது என, நல்ல விதங்களுக்காக செலவிடுகிறேன்.இதுதவிர, என் சேவையைப் பார்த்து என்னுடன் பணியாற்றும் பலர், நிதியுதவி அளிக்கின்றனர். அதை வைத்தும், உற்சாகமாக பல உதவிகளை, எங்கள் கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கி வருகிறேன்!