சென்னை; பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தொற்று பரவல் குறையாத காரணத்தால், மாணவ - மாணவியரை பள்ளிகளுக்கு வரவழைக்க வேண்டாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கிஉள்ளது. வரும், 17ம் தேதி முதல், 1 - 9 வரையிலான வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல பெற்றோர், தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற முயற்சித்து வருகின்றனர். அதற்காக, பள்ளிகளில் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.இதற்காக பள்ளிகளுக்கு வந்து, சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால், மாற்று சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' வழங்குவதா அல்லது நேரில் வழங்குவதா என, பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.இது குறித்து, பள்ளிக்கல்வி துறை, உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் சிக்கல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments
Post a Comment