1598855017970

முதுநிலை மருத்துவப்படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் மொத்த இடங்களில் 50% இடங்கள் கிராமங்களில், தொலைதூர பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டது. 

ஆனால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை தேவை என்று கூறி, நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட சிறப்பான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து, கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அத்திட்டத்தை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. 

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை எதிர்த்து மருத்துவர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவப்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், இந்த இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்து வழங்கலாம் என்றும், இதனைத் தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கே கூட உரிமையில்லை என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளன என்றும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருந்தால் இந்த தீர்ப்பு அதனை பாதிக்காது எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.