சென்னை; இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், பகுதி நேரமாக சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பகுதி நேர இன்ஜினியரிங் படிப்பு உள்ளது.ஆறு அரசு கல்லுாரிகள் மற்றும் மூன்று அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் உள்ளிட்ட ஆறு படிப்புகள், பகுதி நேர வகுப்புகளாக நடத்தப்படுகின்றன.

இப்படிப்புகளில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, 10ல் துவங்கியது. www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பும், ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.மாணவர்கள், டிப்ளமா இன்ஜினியரிங் முடித்து, குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருந்தால், அவர்கள் பகுதி நேர படிப்பில் சேரலாம். எந்த மாவட்டத்திலும், தங்களுக்கான கல்லுாரியை தேர்வு செய்யலாம்.

இது குறித்து சந்தேகங்கள் இருந்தால், 94869 77757, 042 - 2-257 4071, 042 - 2-257 4072 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், secretary ptbe@cit.edu.in மற்றும் ptbe.tnea@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் விளக்கம் பெறலாம். இந்த கவுன்சிலிங் நடவடிக்கைகளை, கோயம்புத்துார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மேற்கொண்டுள்ளது.