சென்னை: தமிழ்நாட்டில் இறுதியாண்டு இறுதித் தேர்வு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்து இருந்தார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், கல்லூரி தேர்வுகள் இதனால் பாதிக்கப்பட்டு, தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற சூழல் இன்றும் நிலவி வருகிறது. பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. தேர்வுகளை ரத்து செய்து, கடந்த கல்வி ஆண்டில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. அன்பழகன் அளித்திருந்த பேட்டியில், ''மாநிலத்தில் பல கல்லூரிகள் கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம். தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு நடைபெறும். இதுதவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படும். இறுதியாண்டில் இறுதி தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்குமான அரியர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கட்டணம் கட்டி இருந்தாலும் ரத்து செய்யப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்தி இருக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும். உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு எங்கே... நீட் ஜெஇஇ... ஒத்தி வைக்க வேண்டும்... பஞ்சாப் முதல்வர் கொதிப்பு!!

ஏற்கனவே பிஏ, பிஎஸ்சி, எம்ஏ, எம்எஸ்சி பிஇ/பிடெக்/பி ஆர்க்/எம்இ/எம் டெக். எம்சிஏ, பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரையும் நடப்பாண்டில் இருந்து அடுத்த கல்வி ஆண்டுக்கு தேர்ச்சி கொடுத்துள்ளது. தமிழக அரசு மதிப்பெண் விகிதாச்சாரங்களில் வெயிட்டேஜ்க்கு 70%, இன்டர்னலுக்கு 30% மதிப்பெண்ணும் அளித்துள்ளது.

source: oneindia.com