பார்வையற்ற மதுரை மாற்றுத்திறனாளி பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை: விழிகளாக வழிகாட்டிய பெற்றோர்  நெகிழ்ச்சி
 பார்வையற்ற மதுரை மாற்றுத்திறனாளி பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை: விழிகளாக வழிகாட்டிய பெற்றோர்  நெகிழ்ச்சி

மதுரை:ஐ.ஏ.எஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.

பூர்ணசுந்தரி கூறியது: முதல் வகுப்பு படிக்கும் போதே பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரை, பாத்திமா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தேன். மூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறேன்.

2015ல் கல்லுாரி படிப்பு முடிந்ததும் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது தோழிகள் பாடங்களை வாசித்து காட்டுவர்.நான்காவது முறை எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.என் பிறந்த நாளான இன்று (நேற்று) தேர்ச்சி பெற்ற தகவல் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

சாதாரண குடும்பத்தில் வறுமையின் வலியை உணர்ந்து பிறந்து, வளர்ந்த நான் ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு கூறினார்.

அண்ணாதுரை பேத்தி வெற்றி

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை நடத்தும் பயிற்சி மையத்தில் படித்த 16 மாணவியரும் 13 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் ஐஸ்வர்யா 47ம் இடம், பிரியங்கா 68, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி பிரித்திகா ராணி 171 இடம் பெற்றுள்ளனர்.