கோவை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில், மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியை தேர்ந்தெடுக்க விருப்பமா? என்ற கேள்வி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கோவையில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பவரின் இரண்டாவது மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் பெற்றபோது, ஹிந்தி மொழி குறித்த கேள்வி அதில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜீவானந்தம் பிபிசி யிடம் பேசினார்.

"எனது இரண்டாவது மகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிக்கோனம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இருந்து, சென்றவாரம் எனது மனைவி விண்ணப்பம் வாங்கியிருந்தார். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காக இன்று காலை நான் எடுத்து பார்த்தபோது, அதில் 14வது கேள்வியாக, 'மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக்கொள்ள விரும்புகிறீரா?' என்ற கேள்வி இருந்தது. உடனடியாக, இதுகுறித்து மற்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் விசாரித்தேன். பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் ஹிந்தி குறித்த கேள்விகள் எதுவுமில்லை என தெரியவந்தது."

ஜீவானந்தம்
"உடனடியாக, காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் மற்றொரு விண்ணப்பம் வாங்கி ஆய்வு செய்ததில், அதிலும் அந்த கேள்வி இருந்தது. ஆனால், விண்ணப்பம் கொடுத்த ஆசிரியர்கள் அந்த கேள்விக்கு பதில் எழுத வேண்டாம் என தெரிவித்தனர். இது, அரசு பள்ளிகளில் ஹிந்தி மொழியை திணிக்கும் செயல்பாடு. இதை ஆரம்பகட்டத்திலேயே வன்மையாக கண்டிக்க வேண்டும்" என தெரிவிக்கிறார் ஜீவானந்தம்.

ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை கோவை மாநகராட்சி செய்கிறதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர், வி.இராமமூர்த்தி கூறுகையில், 'புதிய கல்வி கொள்கையில் கட்டாயம் ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைக்கண்டு மாநில அரசு இரு மொழிக்கொள்கைதான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி தமிழக அரசிற்கு விரோதமாக மாணவர் சேர்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வண்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே இந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தன்னிச்சையாக இந்த கேள்வியை வடிவமைத்ததா அல்லது மாநில கல்வித்துறை இந்த விண்ணப்பத்தை முன்மொழிந்துள்ளதா என்கிற ஐயம் எழுகிறது.

மாநில அரசு அறிவிப்பு மக்களின் எதிர்ப்பை கண்டு ஒருபுறம் இரு மொழிக்கொள்கை என அறிவிப்பு வெளியிட்டு விட்டு மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்தியை திணிக்க தொடங்கி விட்டதா என்கிற ஐயமும் எழுகிறது.

மேலும் கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய பாஜக அரசின் குலக்கல்வி முறையை புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்கிற கேள்வி எழுகிறது. உடனடியாக தமிழக அரசும் கோவை மாநகராட்சியும் இதனை தெளிவு படுத்த வேண்டும்.' என தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் ஹிந்தி மொழி குறித்த கேள்வி இடம்பெற்றதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருக்கின்ற நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே ஹிந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஹிந்தியை திணிக்க தொடங்கி விட்டதா?

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கக்கூடிய நிலையில் அந்த குழு எந்த பரிந்துரையும் செய்யாத நிலையில்,புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த விட்டதா? என்ற கேள்விகள் எழுகிறது.

உடனடியாக கோவை மாநகராட்சி ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமாரிடம் விளக்கம் கேட்டபோது, "ஹிந்தி மொழியை தேர்ந்தெடுக்க விருப்பமா? என்ற கேள்வி இடம்பெற்றுள்ள விண்ணப்பம் போலியானது. இந்த கல்வி ஆண்டிற்கு வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில் ஹிந்தி மொழி குறித்து எந்த கேள்வியும் இல்லை" என தெரிவித்தார்.


source: bbc.com/tamil