தமிழக அரசின் நிரந்தர பணியில் இல்லாத திருமணமான பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு அளிக்கும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைசெயலர் ஸ்வர்ணா வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசில் நிரந்தர பணியில் உள்ள பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த சலுகை தற்போது தமிழக அரசில் தற்காலிகப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சில துறைகளில் அவசர நிலை ஏற்படும்போது தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பெண் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் பேறுகாலத்தின்போது 270 நாட்கள், அதாவது 9 மாதங்களுக்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பை சம்பந்தப்பட்ட துறைஅதிகாரி வழங்கலாம். அதேநேரம், அந்த பெண் பணியாளர் குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மேலும், 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண்களுக்கும், முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற பெண்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால் இந்த சலுகை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

tamil.thehindu.com