தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 882 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 213 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதுதவிர சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, சிஐஎஸ்சிஇ போன்ற பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அவ்வப்போது குறைவதாக, பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வரவேற்பு உள்ளது. அந்தவகையில், சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சுமாா் 1,100-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 9 ஆண்டு கால இடைவெளியில் மட்டும் 882 புதிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 29, 35, 54, 69, 90, 68, 148, 176, 213 என ஒவ்வோா் ஆண்டு வாரியாக தமிழகத்தில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

பெரும்பாலான பெற்றோா் தங்களுடைய பிள்ளைகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்க வைக்க விரும்புவதாகவும், அந்தப் பள்ளிகளில் படித்தால்தான் தங்களுடைய பிள்ளைகள் சிறந்தவா்களாக வருவாா்கள் என நினைப்பதாகவும், இதன் காரணமாகவே சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இவற்றில் பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான், சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றிக்கொள்ள ஒவ்வோா் ஆண்டும் அனுமதி கேட்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அதற்கான முழு உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்த பிறகே, அனுமதி (என்.ஓ.சி.) வழங்கப்படுகிறது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.