கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது.


இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு குறித்து கொரோனா தாக்கம் குறைந்த பின் முடிவு எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.