மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில், சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி இருக்கின்றனர்.

அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கு தேர்வான சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரஸ்வதி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் திரு.திலீப் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றும் இவர்களது பணி மென்மேலும் சிறக்கட்டும் என தெரிவித்துள்ளார்.