Schools, reopen, corona crisis, September 1, பள்ளிகள், திறப்பு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை, செப்., 1 முதல், படிப்படியாக திறப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு, நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுதும், மார்ச் இறுதியிலிருந்து, பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதற்குப் பின், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை; பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கருத்தும், கல்வியாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது, பள்ளிக்கு மாணவர்கள் நேரடியாகச் சென்று படிப்பதற்கு ஈடாகாது என்றும், ஏழை மாணவர்கள் இந்த நடைமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறப்பது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

* நாடு முழுதும், செப்., 1 முதல், பள்ளிகளை படிப்படியாக திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

* முதல், 15 நாட்களுக்கு, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்

* அதற்கு பின், 6 - 9ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் துவங்கப்படும்

* துவக்க மற்றும் மழலையர் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை

* கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பின், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன

* இதே நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது

* இதன்படி, 10ம் வகுப்பில், ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால், அதில், 50 சதவீத மாணவர்களுக்கு மட்டும், குறிப்பிட்ட நேரத்தில் பாடம் நடத்தப்படும். மீதமுள்ள, 50 சதவீத மாணவர்களுக்கு, மற்றொரு நேரம் ஒதுக்கப்பட்டு, பாடம் நடத்தப்படும்

* இதற்காக, எல்லா பள்ளிகளிலும், காலை, 8:00 - 11:00 மற்றும் பகல், 12:00 - 3:00 என, இரண்டு, 'ஷிப்ட்' முறைகள் பின்பற்றப்படும்

* ஒவ்வொரு பள்ளியிலும், குறிப்பிட்ட நேரத்தில், 33 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர்

* வகுப்புகளில், தனி மனித இடைவெளி பின்பற்றப்படும். ஐந்து பேர் அமரக்கூடிய நீளமான இருக்கையில், இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவர். இந்த இரண்டு மாணவர்களுக்கும் இடையே, 6 அடி இடைவெளி இருக்கும்

* பள்ளிகளை திறப்பதற்கான முறையான வழிகாட்டும் குறிப்புகள், விரைவில் வெளியிடப்படும்

* மத்திய அரசு தரப்பில், இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், வைரஸ் பாதிப்பை அடிப்படையாக வைத்து, பள்ளிகளை திறப்பதற்கான தேதியை அறிவிப்பது குறித்த இறுதி முடிவை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அறிவிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வை பொறுத்தவரை, தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், முதல்வரின் கொள்கை. தமிழகத்தில், வரும் நவம்பரில் பள்ளிகள் திறப்பதாக வந்த தகவல் தவறானதாகும். அது போன்று நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இன்றைய சூழலில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின், பெற்றோரின் மனநிலையை அறிந்து தான், பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் முடிவு செய்வார். 'ஆன்லைன்' வகுப்பு குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆக., 19ல் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற விபரங்களை, நீதிமன்றத்தில் அளித்துள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்குப் பின், முடிவுகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, நாளை மறுநாள், முதல்வர் முடிவை அறிவிப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.