17 நாட்களுக்கு பின்  குறைந்தது தங்கம் விலை

சென்னை; தமிழகத்தில், 17 நாட்களுக்கு பின், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 248 ரூபாய் குறைந்தது.சர்வதேச நிலவரங்களால், தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில், ஜூலை, 18ல், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,703 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அம்மாதம், 20ம் தேதி, கிராம் தங்கம், 4,702 ரூபாயாக குறைந்தது. அடுத்த நாள், கிராம், 4,717 ரூபாயாக அதிகரித்தது. வெள்ளி கிராம் விலை, 60.10 ரூபாயாக இருந்தது.அன்று முதல், நேற்று முன்தினம் வரை, 17 நாட்களாக தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத அளவிற்கு, தொடர்ந்து உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம், கிராம் தங்கம், 5,416 ரூபாய்க்கும்; சவரன் முதல் முறையாக, 43 ஆயிரம் ரூபாயை தாண்டி, 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கும் விற்பனையாயின. கிராம் வெள்ளி, 83.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 31 ரூபாய் குறைந்து, 5,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 248 ரூபாய் சரிந்து, 43 ஆயிரத்து, 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, 20 காசுகள் குறைந்து, 83.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த, 17 நாட்களில் மட்டும், தங்கம் கிராமுக்கு, 668 ரூபாயும்; சவரனுக்கு, 5,344 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், வெள்ளி விலை கிராமுக்கு, 23.30 ரூபாய் உயர்ந்துள்ளது.