கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் படி கடந்த மாதம் 15 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1,6,9 ஆகிய வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் இன்று புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

புத்தகங்களை பெறுவதற்கு வரும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் வீதம் பாடப்புத்தகங்கள் கொடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.