சென்னை; இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. இதுவரை, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட பின், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியது.தமிழக உயர் கல்வித்துறை உத்தரவின்படி, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 15ல் துவங்கியது.முதல் நாளிலேயே, 23 ஆயிரம் பேர் விண்ணப்பம் பதிவு செய்தனர். பின், 10 நாட்களில், ஒரு லட்சமாக விண்ணப்ப பதிவு அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று மாலையுடன், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிந்தது. மொத்தம், 1.60 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால், கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையிலும், அதிக மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க, ஆர்வம் காட்டியுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்ற, ஜூலை, 31ம் தேதி முதல் வசதி செய்யப்பட்டது.

இந்த அவகாசம், 20ம் தேதியுடன் முடிகிறது.இதைத் தொடர்ந்து, வரும், 21ல், 'ரேண்டம்' எண் ஒதுக்கப்படும். செப்டம்பர், 7ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.