சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 29ம் தேதி துணைத் தேர்வு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல பருவத் தேர்வு அடிப்படையில் தோல்வி அடைந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடக்கிறது. இதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிவரையும், பிளஸ் 2 தேர்வுகள், செப்டம்பர் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்க உள்ளன. இந்த துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* மார்ச் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள்(பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்)தனித் தேர்வர்கள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள துணைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

* கடந்த மார்ச் 26ம் தேதி நடக்க இருந்து ரத்து செய்யப்பட்ட பிளஸ் 1 வகுப்பு வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல்(புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான தேர்வை எழத ஏற்கெனவே விண்ணப்பித்து இருந்த தனித் தேர்வர்கள் மட்டும் மீண்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை.

* மேற்கண்ட மாணவர்கள் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடம் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி அடையாமல் இருந்தால், அந்த பாடங்களுக்கான தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

* பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 24ம் தேதி முதல் 27ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

* பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க  வேண்டும்.


* பள்ளிகள் மூலம் பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு தேர்வுகளை எழுதி தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் குறிப்பிட்ட அந்த பாடங்களை எழுத மீண்டும் அந்தந்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

* பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை பழைய பாடத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள துணைத் தேர்வின் போது, அதே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத இதுவே இறுதி வாய்ப்பு.

* ஓராண்டுக்கு முன்பு நேரடித்தனித் தேர்வர்களாக பிளஸ்1, தேர்வு எழுதிதேர்ச்சி பெறாதவர்கள், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கும், பிளஸ்1 தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.