கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்கள் முடிவு எடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், தங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் #StudentsLivesMatter உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. அனைத்து கல்லூரி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.