5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, தேர்வு முறை மாற்றம் 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB) இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது.

பிஐபி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ள அந்த முக்கிய அம்சங்கள்:

பள்ளிக்கல்வியில் உலகளாவிய அணுகுமுறை

பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.

கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவுவதுடன், மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருதல், ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது, 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல், 10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10+2 பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றாக...

முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.

இதுவரை பள்ளிக்கு வராத 3 - 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும். குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும். 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.

முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்ட, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு வழங்கப்படும். முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை அடைதல்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால், தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும். தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள், பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருககும். புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.

பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது. மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் ' இந்திய மொழிகள் ' குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/ நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இடைநிலைக் கல்வி மட்டத்தில், பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும். நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி தரப்படுத்தப்படும். செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தேசிய, மாநில பாடத்திட்ட ப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதிப்பீட்டு சீர்திருத்தங்கள்
புதிய கல்வி கொள்கை 2020 , சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து , வழக்கமான , முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் ,திறன் அடிப்படையிலான , கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.