கரோனா நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் மாணவ/ மாணவியர்களுக்கு சத்துணவு வழங்கப்பட இயலாத நிலையில், உலர் பொருட்களாக வழங்க அரசு உத்தரவிட்டு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 25-ம் தேதி மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க இயலாத நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சத்துணவுக்கான பொருட்களை மாணவர்களுக்கு நேரடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

இதற்காக 16,138.69 டன் அரிசியும், 5,207 டன் பருப்பு வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 23,71,316 பேர், இடைநிலைப் பள்ளி மாணவர்கள் 18,89,808 பேர் என மொத்தம் 42,61,124 மாணவர்கள் பயன் பெறுவர்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* எம்ஜிஆர் சத்துணவுத் திட்டப் பயனாளிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சத்துணவுத் திட்ட உணவுப் பொருட்களை பள்ளிவாரியாக, வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது நேரடிக் கண்காணிப்பில் தயார் செய்தல் வேண்டும்.

* பள்ளிவாரியாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மாற்றி மாவட்ட ஆட்சித் தலைவரால் பயனாளிகள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப் படுத்தப்பட வேண்டும்.

* உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களைப் பயனடையும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்/ பாதுகாவலர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் ஒட்டி வைக்கப்பட வேண்டும். மாணவ மாணவியர்கள் பள்ளியிலேயே அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியயைகள் மேற்பார்வையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

* உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதைக் கண்காணித்து சரியாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) ஊர் நல அலுவலர் (மகளிர்) மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட குழு வட்டார வளர்ச்சி அலுவலர் அமைக்கப்படவேண்டும்.

* மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் அதேபோன்ற நகர்ப்புற பகுதிகளில் அமைக்க வேண்டும்.

* மாணவ, மாணவிகளின் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் பயனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்தப் பள்ளிகளுக்கு வந்து உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

* மாணவ, மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் பயனாளிகள் அல்லது அவரது அவர்களின் பெற்றோர்/ பாதுகாவலர் குறிப்பிட்ட நாளில் அந்தந்தப் பள்ளிகளுக்கு பைகளுடன் வந்து உலர் உணவுப்பொருட்களைப் பெற்றுச் செல்லவேண்டும்.

* மாணவ, மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் சரிபார்த்து மாணவரது பெயர் பயிலும் வகுப்பு மற்றும் பிரிவு ஆகிய விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து ஒப்புகை பெற்றபின் மாணவரது பெயர் மற்றும் பயிலும் வகுப்பு குறிப்பிட்ட ஒரு வில்லையை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

* அந்த வில்லையை சத்துணவுப் பணியாளர்களிடம் அளித்து உணவுப் பொருட்களைப் பயனாளிகள் பெற்றுக்கொள்ளவேண்டும். சத்துணவுப் பணியாளர்கள் வில்லையை ஒட்டி வைக்க வேண்டும்.

* சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்.

* சத்துணவுத் திட்ட மையங்களில் தற்போது இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

* சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் தலைமை ஆசிரியர் முன்னிலையில் எடை இயந்திரத்தில் சரியான அளவிற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு பாத்திரம் மூலம் உணவுப் பொருட்களை அளந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிகளில் உலர் உணவுப் பொருட்கள் எந்த இடையூறும் இல்லாமல் முறையாக வழங்கப்படுவதை மேற்பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாவட்ட அளவிலான ஒரு அலுவலரை மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் நேரடிக் கண்காணிப்பில் எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி இதனைச் செயல்படுத்த வேண்டும்'.

இவ்வாறு அரசு செயலர் தெரிவித்துள்ளார்.