தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறைகள்...

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று மாலை தொடங்கிவைத்து பேசியதாவது:

ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெறப்படும் எனவும், இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் செப்டம்பர் 10 மற்றும் 17ம் தேதிகளில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 62.6 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள், ஆன்லைன் தொடர்பான விவரங்கள், சேவை மையங்கள் குறித்த பட்டியல்கள் அனைத்தும், www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறைகள் பின்வருமாறு :

ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 21ம் தேதிவெளியிடப்படும்.
செப்டம்பர் 7ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு செப்டம்பர் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை நடக்கும்.
பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் செப்டம்பர் 17ம் தேதிமுதல் அக்டோபர் 6ம் தேதி வரை நடக்கும்.
தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை நடக்கும்.
துணைக் கவுன்சலிங்(இருபிரிவு) இணைய தளம் மூலம் அக்டோபர் 8ம் தேதிமுதல் 12ம் தேதி வரை நடக்கும்.

எஸ்சி(ஏ) காலியிடம் மற்றும் எஸ்சி பிரிவினருக்கான கவுன்சலிங் இணைய தளம் மூலம் அக்டோபர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி வரை நடக்கும்.
கவுன்சலிங் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடையும்.