சென்னை; 'கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில், சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தேசிய அளவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய், 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள், 'கிரீமிலேயர்' என, அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.கிரீமிலேயர் வரம்பை கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் வாயிலாக கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படாது.பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என, 1993ம் ஆண்டு மத்திய அரசின் குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.தற்போது, சம்பளம் வாயிலாக கிடைக்கும் வருமானத்தையும், கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப் போவதாக, மத்திய அரசு அறிவித்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைக் காப்பது தான், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணி. அதை உணர்ந்து, கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில், சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.