கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் வேளாண் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக, கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நேரில் சென்று கருத்துக்களை பெற இயலாத சூழல் உள்ளது.

இந்நிலையில் தபால் மூலம் கருத்துக்களை பெற கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. தனியார் வேளாண் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தபால் மூலம் தெரிவிக்கலாம் என்று கல்விக் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது. அவர்கள் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணசுந்தரத்தின் முகவரிக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள்ளாக தபால் மூலம் கருத்துருக்களை அனுப்பி வைக்கலாம் என்றும், தபால் மூலம் பெறப்படும் கருத்துக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.