தந்தைக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்காததால் பள்ளிக் கட்டணத்தை மாணவியால் கட்ட முடியவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு மாணவியை தனியார் பள்ளி அனுமதி அளிக்காததால் வேதனையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனோ தொற்று ஆரம்ப கட்ட நிலையில் இருந்த போது கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவித்தது தமிழக அரசு, பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டதால் தற்போது அதன் ரிசல்ட்டுக்கான மாணவ? மாணவிகள் காத்திருக்கின்றனர். விரைவில் பிளஸ் 2 ரிசல்ட் அறிவிக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டு 5 மாதங்கள் நெருங்கும் வேளையில் கொரோனா அச்சம் காரணமாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பல தனியார்கள் பள்ளிகள் ஆன்லைகள் வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதோடு, கட்டணங்களை உடனே செலுத்துங்கள் என்று பெற்றோர்களின் செல்போன்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது தனியார்கள் பள்ளிகள். பல பெற்றோர்கள் என்ன செய்வது என்று விழிபிதுங்கி இருக்கின்றனர்.நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகள், வடகுடியில் உள்ள அமிர்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தையின் செல்போனுக்கு பள்ளி சார்பில் மெசேஜ் அனுப்பியுள்ளது. அதில், “அடுத்த வாரம் ஆன்லைன் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் இன்றிலிருந்து, ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. ஆனால், கல்வி கட்டணம் மீதமுள்ள மாணவர்கள், முழுமையாக கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளது.

இதனை பார்த்த மாணவி, ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மன விரக்தியில் மனமுடைந்து வீட்டின் அறையில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியை காப்பாற்றிய உறவினர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“நாகூர் அடுத்த நரிமணம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் கொடுக்காத காரணத்தால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார் மாணவியின் தந்தை விஜயராஜ்.