சென்னை; தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாத, இலவச மாணவர் சேர்க்கையை, அரசு இன்னும் துவங்காததால், பெற்றோர் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. ஜூன், 1ல் துவங்க வேண்டிய பள்ளிகளில், இன்னும் வகுப்புகள் துவக்கப்படவில்லை.அதேநேரம், தனியார் பள்ளிகளில், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமும் ஒவ்வொரு பாடத்துக்கும், மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மேலும், பல பள்ளிகளில், ஆன்லைன் வழியில், மாணவர் சேர்க்கையும் முடிந்து விட்டது. ஆனால், தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பில், இலவச மாணவர் சேர்க்கை இன்னும் நடத்தப்படவில்லை.ஒவ்வொரு பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், இலவச சேர்க்கை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசு வழங்கும்.

இதனால், பள்ளி நிர்வாகிகளும், இலவச சேர்க்கையை எதிர்பார்த்துள்ளனர்.இந்த திட்டத்தில், தனியார் பள்ளிகளில் சேர காத்திருக்கும் மாணவர்கள், பள்ளிகளில் சேர முடியாமல் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.எனவே, தமிழக பள்ளிகல்வி துறை இந்த விஷயத்தில், உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, இலவச மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.