பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வருமான சான்றிதழ் வழங்க தடை இல்லை

சென்னை: 'மத்திய அரசு பணி மற்றும் கல்வி தேவைகளுக்கு மட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமான சான்றிதழ் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.இதன்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இட ஒதுக்கீடு பெற, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் பெற வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்குள் பெறுவோர், பொருளாதாரத்தின் பின்தங்கியோருக்கான, இட ஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள். அதன்படி, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.கடந்த மாதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க, தமிழக அரசு தடை விதித்தது.

இதனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள், மத்திய அரசின் சலுகையை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய முறைப்படி, சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என, பல்வேறு சமூகத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி மற்றும் அரசு பணிகளில் சேர மட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, பொதுப் பிரிவினருக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு, திரும்ப பெறப்படுகிறது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். இந்த சான்றிதழ்களை, மத்திய அரசு பணியில் சேரவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரவும் மட்டும் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.