கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதை அடுத்து மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட பருவத்தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தலின்படி மாணவர்கள் முந்தைய பருவத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் 50 சதவீதமும், நடப்பு பருவத்துக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதமும் சேர்த்து இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும்.
அதேபோல், முந்தைய பருவத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுவதும் நடப்பு பருவத்தின் அகமதிப்பீடு அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் கணக்கீடு நடைபெறும்.

இந்தத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள், நிலைமை சீரான பின்னர் நடத்தப்படும் சிறப்பு தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம். அதேநேரம் மாணவர்கள் அரியர் பாடத்தேர்வுகளை கட்டாயம் எழுதி வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்த அரியர் தேர்வு கடைசி வாய்ப்பாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.