கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்த அறிவிப்பை பதில் மனுவாக மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற நோய் வருவதாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வருகிற ஜூலை 27ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்