நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்(ஏஐசிடிஇ) 62-ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம்:

புதிய கல்வியாண்டு ஆகஸ்ட் 1-இல் தொடங்கி 2021-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை பின்பற்றப்படும்.

இதுதவிர பொறியியல் படிப்பின் மாணவா் சோக்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

மேலும், 2, 3-ஆம் சுற்று கலந்தாய்வை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

வரும் கல்வியாண்டில் 2, 3, 4-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும். தொடா்ந்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் செப்டம்பா் 15-இல் தொடங்க வேண்டும்.

முதுநிலை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளை செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கலாம். இதற்கான மாணவா் சோக்கை பணிகளை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.