பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது யு.ஜி.சி. பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற யுஜிசி அறிவிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அல்சோ கூஸ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், தற்போது கொரோனா வைரஸ் பரவல் கணிக்க முடியாத வகையில் இருப்பதாகவும் இத்தகைய சூழலில் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வழிவகுக்கும் எனவும் வாதிட்டனர். அதன் பின்னர் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், இணைய வழித் தேர்வு மற்றும் உரிய சமூக இடைவெளியுடன் தேர்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை பல்கலைக் கழகங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளைக்குள் யுஜிசி அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.