சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஊதியம் தொடர்பான செலவினங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்க தடை விதிக்கப்படுகிறது.
எந்தவகை ஊதிய விகிதத்தைக் கொண்ட அரசு அதிகாரி என்றாலும், விமானப்பயணத்தில் உயர் வகுப்புக்கு அனுமதி இல்லை. தினசரி படிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. தகுதியுள்ள அளவில் 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

பொதுவான பணியிட மாற்றங்கள் 2020-21ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இடமாற்றப் பயணங்களுக்கான செலவை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணியிட மாறுதல்கள் நிர்வாக ரீதியில் உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பு விருப்ப மாறுதல்களை அனுமதிக்கலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு பயணச் சலுகை திட்டம் மறு உத்தரவு வரும்வரை தள்ளிவைக்கப்படுகிறது. அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் கணக்குகளில் இருந்து பரிசுப் பொருள்கள் வழங்குவது, பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலர் மாலைகள் உள்ளிட்ட இதர பொருள்களை வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: oneindia.com