புதுடெல்லி: வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. டெபாசிட் மீதான வட்டிகளுக்கும் இது பொருந்தும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி அல்லது அஞ்சலகங்களில் இருந்து பணத்தை எடுத்தால் 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுத்தால் 5 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறை கடந்த 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு நடை முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி வருமான வரி தாக்கல் செய்ய தனி நபர் தனது வங்கி அல்லது அஞ்சல் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்து இருந்தால் 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்நிலையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நடைமுறையை எளிதாக்க புதிய செயல்முறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வரிகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து இருந்தால் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு டெபாசிட் பணம் எடுப்பவர்களிடம்  வங்கி மற்றும் அஞ்சலகங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை எளிமைப்படுத்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி பணம் எடுப்பவரின் பான் நம்பரை உள்ளீடு செய்தால் போதும். டிடிஎஸ் பிடித்தம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது பற்றி வங்கிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பான் எண்ணை உள்ளீடு செய்வதற்கு உடனடியாக தானியங்கி முறையில் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த புதிய நடைமுறையில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேலான சரி பார்ப்புகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் இருந்து வந்துள்ளன. மைய வங்கி சேவை உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் இது மிக எளிமையான செயல்பாடாக இருக்கும். டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குழப்பம் எதுவும் ஏற்படாது. கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே நிதி சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினகரன்