தனியார் பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரிய வழக்கில் தமிழக அரசு ஜூலை 8ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான இந்தாண்டு கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அடைக்கல அன்னை சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அரசுப் பள்ளிகளை போல, தனியார் பள்ளிகளுக்கும் இந்தாண்டு இலவச பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மற்ற துறையினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது போல, இந்த ஆண்டு மட்டும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மனுதாரரின் கோரிக்கையை குறித்து ஜூலை 8ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.