வெற்றிபெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும். இமாலய சாதனைகளைகூட அவர்களால் வெல்ல முடியும். இதற்கு  தன்னம்பிக்கைதான் காரணம். மாணவர்களில்கூட தன்னம்பிக்கை உடையவர்கள் தடம் புரளாமல் வெற்றி நோக்கி செல்ல முடியும். தன்னம்பிக்கை இல்லாமல் தன்னையே நம்பாதவன் தடம் புரள்கிறான். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து விடுவேன் என்று முயன்று முயற்சி செய்கிறவனின் நம்பிக்கை எண்ணம் உடையவனால் அதை சாதிக்க முடிகிறது. சிலர் படிக்கும்போதும், தேர்வு எழுதும்போதும்கூட தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள்.

ஒரு சில மாணவர்கள் நம்பிக்கையுடன் படிக்கும்போது அந்த மாணவர்களிடத்தில்கூட ‘டேய் எவ்வளவு எழுதினாலும் பத்து மார்க்கு கேள்வி-பதிலுக்கு எட்டு மார்க்குக்கு மேல் போடமாட்டார்கள்’ என்று ஆரம்பத்திலே அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் இப்போது எல்லாம் நூற்றுக்கு நூறு எல்லா பாடங்களிலும் எடுக்க முடிகிறது. இதற்கு தன்  மீதான அபார நம்பிக்கைதான் காரணம். 30-40 ஆண்டுகளுக்கு முன் கணிதம் தவிர மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுப்பது மிகவும் அரிது. அதே பாடத்திட்டங்கள் தற்போது சிறிது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் எப்படி முழுமையாக கிடைக்கிறது. அதுதான் மாணவர்களின் அபார நம்பிக்கை.