கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இதனால், ஜூலை 31 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. 

அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.


இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.