கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து இவ்வாண்டு நடத்தப்பட இருந்த விஐடி பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அல்லது ஜேஇஇ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ..

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திரப்பிரதேசம்), போபால் (மத்தியப்பிரதேசம்) வளாகங்களில் சேர்ந்து தங்களது படிப்பை தொடர்கின்றனர்.
தற்போது கரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு விஐடி பல்கலைக்கழகம் இவ்வாண்டுக்கான பிடெக் நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.

இதேபோல், ஜே. இ.இ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு மாணவ, மாணவிகள் தங்களின் ஜே.இ.இ மதிப்பெண்களை விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை உடனடியாக விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம் அல்லது செல்லிடப்பேசி 95666 56755, இலவச தொடர்பு எண் 1800 102 0536 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.