அமராவதி: ஆந்திராவில் செப். 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ளன.இந்நிலையில் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்வதற்காக அம் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறை அமைச்சர்கள் , அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இது குறித்து கல்வி அமைச்சர் சுரேஷ் கூறியது, மாநிலத்தில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நர்சரி பள்ளிகள்,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை மீண்டும் திறப்பது பல்வேறு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. இதில் செப். 5-ம் தேதி திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.