சென்னை : 'வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' வழி கல்வி நடைமுறைப் படுத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள அரசாணை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு, மூன்று வழிகளில், 'டிஜிட்டல்' கல்வி வழங்கப்பட உள்ளது. கணினி, 'ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் - டிவி' வகையாகவும்; கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வழியாகவும்; 'ஆன்லைன்' அல்லாமல், 'போன், டேப்லெட், கணினி, லேப்டாப், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ' வழியாகவும் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், தீக் ஷா செயலி வழியாகவும், பாடங்கள் கற்பிக்கப்படும். வீட்டுப் பள்ளி என்ற திட்டத்தின் வழியாக, வீடியோவில் பாடங்கள் நடத்தப்படும். மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரைவில், வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகும்.பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசின் லேப்டாப்பில் வீடியோ பாடங்கள், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளன. கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பான வீடியோ பாடங்கள், வரும், 3ம் தேதி முதல், தனியார், 'டிவி'க்களில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.வீட்டு பள்ளி திட்டத்தில், தினமும் ஒரு மணி நேரம் மட்டும், வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படும். பாடப்புத்தகங்களை, 'க்யூஆர்' குறியீட்டின் வழியாகவும், படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இ - பாடசாலை திட்டம், தேசிய திறந்தநிலை கல்வி ஆதாரங்கள் இணையதளம், ஸ்வயம் திட்டம் ஆகியவற்றிலும், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள், டிஜிட்டல் வழி பாடத்தை கற்பிக்க, தேவையான முயற்சிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.'யூ டியூப்' வழியாகவும், 'நீட்' தேர்வுக்கான இலவச, ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் கற்பிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலன் கருதி, உரிய விதிகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

கற்பித்தல், மாணவர்களிடம் உரையாடுதல், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து வகை பணிகளும், டிஜிட்டல் கல்வியில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.