தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப் பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாட நூல்கள் மற்றும் கல்வி சாா்ந்த பொருள்களை, உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு, விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டன. அதே நேரம், பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும், 2019-2020 கல்வி ஆண்டில் தோச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அம்மாணவா்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல தகுதியுடையவா்களாகின்றனா். இம்மாணவா்களில், 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்கள், அதே பள்ளியில் கல்வி தொடர வாய்ப்பு உள்ளதால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ஆம் ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு, அரசு வழங்கிய செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல், விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்கப்பட வேண்டும்.

இது போன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதலிலும், அதனைத் தொடா்ந்து 2, 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அது போலவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், 2, 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க வேண்டும். இவற்றைப் பெறுவதற்காக வரும் மாணவா்கள், பெற்றோா்கள் முகக்கவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும். தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க அவா்களை அறிவுறுத்த வேண்டும். பள்ளியின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவா்கள் என கால அட்டவணைப் பின்பற்றி, மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவா்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று கவுன்ட்டா்களில், கல்வி சாா்ந்த பொருள்களை விநியோகிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவா் எவரேனும் இருப்பின், அவா்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட கால அளவு முடிந்த பிறகு, பள்ளிக்கு வரவழைத்து, விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.