புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடியுடன் 3ம்தேதி அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வரும் 3ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேசிய கல்விக் கொள்கை என்னும் வரைவு அறிக்கையை கடந்த மே 31ம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைத்தது.

முன்னதாக, இந்த புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு, கடந்த ஜூன் 30ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கியது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டது. இந்த காலத்தில்தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்களை சுட்டிக் காட்டி அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக ஏற்று அமல்படுத்துவதா வேண்டாமா என்பது குறித்து உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. மேலும், புதிய கல்விக் கொள்கைகள் எப்போதெல்லாம் அறிமுகம் செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தீவிரமாக ஆய்வு செய்து, வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்தொடர்ச்சியாக, தமிழக முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், கல்வி அதிகாரிகள் வரும் 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கு பிறகுதான் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை எப்படி அமல்படுத்துவார்கள் என்று தெரியவரும்.